திருப்பூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது!
காவல்துறை விசாரணை
திருப்பூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை கைது செய்தனர்.
காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் பெரியதோட்டம் 5-வது வீதியை சேர்ந்தவர் அப்பாஸ்.இவரது மகன் அப்துல் அஜீஸ் (23).இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையை விடுமுறையையொட்டி கடந்த 17 ம் தேதி அப்துல்அஜீஸ் தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட காதலியின் அண்ணன் அப்துல் ரகுமான், எனது தங்கையுடனான காதல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும். எனவே திருப்பூர் நொய்யல் ஆறு மின்மயானம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அப்துல் அஜீஸ் தனது நண்பருடன் அங்கு சென்றார். அப்போது அப்துல்ரகுமான், எனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு அப்துல் அஜீசிடம் வலியுறுத்தி உளளார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து அப்துல்அஜீசை அரிவாளால் சரமாரி வெட்டினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினர். அவர்களிடம் இருந்து அப்துல் அஜீஸ் தப்பியோட முயன்றார். இருப்பினும் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் அப்துல் அஜீசின் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. மேலும் அதனை தடுக்க முயன்ற நண்பர் ஒருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வரவே அப்துல்ரகுமான் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிேயாடினார். காயமடைந்த அப்துல்அஜீசை நண்பர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்துல் அஜீஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்(22) காஜா பக்ரூதீன் (20), அபிப்ரகுமான் (23) மற்றும் அபீபரா அகமது (20), சுபாஷ் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story