கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில் 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.12 ஆம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில், காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் பழுப்பு நிற டேப் சுற்றப்பட்ட 310 பாக்கெட்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், வண்டியின் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திர பதிவு எண் கொண்ட வண்டிக்கு, தமிழக பதிவு எண்ணை ஒட்டி, பயன்படுத்தியது தெரிந்தது. இது தொடர்பாக வண்டியில் இருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணன் (43), தவமணி (38), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் (39), பரமானந்தம் (47), செல்வராஜ் (58), ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ரமணன் மற்றும் தவமணி இருவரும் ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.6 ஆம் தேதி லாரியில் கஞ்சாவை எடுத்து வந்தனர்.
பிறகு ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகியோருடன் இணைந்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக 310 பொட்டலங்களில் இருந்த 661.50 கிலோ கஞ்சாவை வைத்து இருந்தது தெரியவந்தது. இவ்வழக்கு, தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தரராஜன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ரமணன், தவமணி, ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.