விவசாயி வீட்டில் 5 சவரன், ரூ.10 ஆயிரம் திருட்டு - அடுத்தடுத்து கைவரிசை முயற்சி

விவசாயி வீட்டில் 5 சவரன், ரூ.10 ஆயிரம் திருட்டு - அடுத்தடுத்து  கைவரிசை முயற்சி

அடுத்ததடுத்த வீடுகளில் கைவரிசை முயற்சி 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(65), விவசாயி. இவர் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டில் கடந்த 7ம் தேதி இரவு குடும்பத்துடன் உணவு சாப்பிட்டு தூங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி திடீரென கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், தாழ்ப்பாள் உடைந்திருந்ததால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5அரை சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதேபோல், கிருஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே வசிக்கும் கலையரசி(36), ரவிச்சந்திரன்(60) மற்றும் அவர்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க பின் பக்க கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, கலையரசி, ரவிச்சந்திரன் ஆகியோர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story