5 கோவில் சிலைகள் மாயமான வழக்கில் போலீசார் திணறல்!
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருடப்பட்ட இரண்டு சோமாஸ்கந்தர் சிலைகள், தலா ஒரு விநாயகர் சிலை, பெருமாள் சிலை, தாயார் சிலை என, ஐந்து சிலைகள் திருடப்பட்டு பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில இடங்களில் வழக்குகள், காவல் நிலையத்தில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கும் நிலையிலேயே இழுபறியில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட கோவில் சிலைகள், பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மெத்தனமாக செயல்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறார். அதற்கேற்றாற்போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருடப்பட்ட சிலைகள் பற்றிய தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகாமல் உள்ளன. காலம், காலமாக பக்தர்களால் வழிபட்டு வந்த சிலைகளை மீண்டும் கோவிலில் வைத்து எப்போது வழிபட முடியும் என, பக்தர்கள் ஏங்குகின்றனர்.