ஊத்துக்காடு கோவில் குளத்தில் 5 டன் பிளாஸ்டிக் சேகரிப்பு
ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள கோவில் குளத்தை துாய்மைப்படுத்தினர்
விதைகள் தன்னார்வ அமைப்பினர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குறுங்காடு உருவாக்குதல், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாற்று இடத்தில் நடவு செய்வது, நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள கோவில் குளத்தை துாய்மைப்படுத்தினர்.
இதில், ஆறு டிராக்டர் வாயிலாக, 5,௦௦௦ கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு, ஊராட்சி குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன், தமிழ்நாடு சுற்றுச்சூழல், கால்நடை துறை மற்றும் திருவேணி அகாடமி பள்ளி மாணவர்கள், ஆதி கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பாலாறு லயன் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள், ஊத்துக்காடு ஊராட்சி தலைவர் மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர்.
குளத்தைச் சுற்றி ஆறு இடத்தில் குப்பை தொட்டிகள் இருந்தாலும், கழிவுகளை குப்பை தொட்டியில் போடாமல் குளத்தில் வீசுவது, மிகவும் வேதனைக்குரிய செயலாக இருந்து வருகிறது. எனவே, குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விதைகள் தன்னார்வ அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்."