அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து!

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து!

விபத்து

ராணிப்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையை அடுத்த சுங்கச்சாவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வரை 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதற்காக சுமைதாங்கி, துரைபெரும்பாக்கம், ஈராளச்சேரி, களத்தூர், பெரும்புலிப்பாக்கம் ஜங்ஷன் மற்றும் ஓச்சேரி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓச்சேரி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்த பணிகள் காரணமாக சாலையின் இருபுறமும் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தினமும் வாகன விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி பகுதியில் சென்னை நோக்கி சென்ற ஒரு டிப்பர் லாரி மீது, மற்றோரு லாரி மோதியது. தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த 2 கார்கள் மற்றும் ஒரு மினி சரக்கு வேனும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன. இதனால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags

Next Story