50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்

50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (08.02.2025) வழங்கினார். இந்நிகழ்வில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஒரு மகத்தான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு காணப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் லப்பைக்குடிகாடு வீட்டுவசதி சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பதிவு செய்து, பெண்ணகோணம் (வடக்கு) கிராமத்தில் லப்பைக்குடிகாடு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கிரையம் மனைகளாகப் பிரித்து, ஜமாலியா நகர் என்று பெயரிடப்பட்ட பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதால், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுமார் 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் இப்பகுதி ஜமாத் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டோம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கும் போதெல்லாம் முதல் கோரிக்கையாக ஜமாலியா நகர் பகுதி மக்களுக்கு பட்டா கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பேன். ஒரு நூல்கண்டில் ஏற்படும் சிக்கலை கண்டறிவது எப்படி சிரமமோ, அதே போன்ற சிரமம் தான் ஜமாலியா நகர் பகுதியில் இருந்தது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தபோது, தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஜமாலியா நகர் மக்களுக்கு மறுநில அளவை மற்றும் நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு 380 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர் நடவடிக்கையால், மாவட்ட வருவாய் அலுவலரின் முயற்சியால் வருவாய்த்துறையினர், நில அளவைத் துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, 380 நபர்களில் முதல்கட்டமாக 100 நபர்களுக்கு இன்று வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள நபர்களுக்கும் விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஜமாலியா நகர் பொதுமக்களுடன் இணைந்து நானும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஜமாலியா நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிய பின்புதான், நான் எனது வாழ்க்கையில் மிகுந்த ஒரு மன நிம்மதியான நாளாக கருதுகிறேன். ஒரு அரசு எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் அரசு திகழ்கின்றது, பெரம்பலூர் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாக்களில் ஏறக்குறைய 10,000 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. லப்பைகுடிகாடு பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றுவேன். இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானம் பள்ளமாக உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விளையாட்டு மைதானத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள், 50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நிறைந்த மனமாக நன்றி தெரிவித்துக் கொண்டனர். வீட்டுமனைப் பட்டா பெற்ற சௌகத் அலி என்பவர் தெரிவித்ததாவது: எனது பெயர் சௌகத் அலி. என் தந்தை பெயர் அப்துல் ரஹீம். நான் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள ஜமாலியா நகரில் வசித்து வருகிறேன். நான் வசித்த பகுதி மனை அங்கீகாரம் பெறப்படாமல் இருந்ததால், பட்டா பெற முடியாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தோம். எங்களுடைய கோரிக்கையை பலமுறை அரசுகளுக்கு மனுக்களாகவும் நேரடியாகவும் அளித்து வந்தோம். ஆனால் எங்களுக்கு பட்டா கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது எங்கள் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினரான மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடம், இந்த கோரிக்கை சம்மந்தமாக தெரிவித்தோம். அவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, பட்டா கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு எங்களுடைய நீண்ட நாள் நிறைவேறாத ஆசையாக இருந்து வந்த வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து, இன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவருடைய கைகளால் பட்டா பெற்றது மிக்க மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. இந்த உதவிக்காக நான் மட்டுமல்ல, என் தலைமுறை முழுவதும் முதல்வருக்கு நன்றி கடன் பட்டிருக்கும் என்பதை நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார். வீட்டுமனைப் பட்டா பெற்ற வஹிதா பானு என்பவர் தெரிவித்ததாவது: எனது பெயர் வஹிதா பானு. என் கணவர் பெயர் அன்வர் பாஷா. நான் ஜமாலிய நகரில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறேன். நான் வசிக்கின்ற பகுதி அரசு அங்கீகாரம் பெறாத மனை என பின்னர் தான் தெரிந்து கொண்டேன். இதனால் எனக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் கிடைக்கப் பெறாமல் இருந்ததால் மிக வேதனையுடன் வசித்து வந்தேன். எனது கணவர் ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்தோம். பட்டா வேண்டி நானும், எனது கணவரும் பலமுறை அரசுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் பட்டா கிடைக்காமல் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளுடைய கோரிக்கையினை நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் எங்களுக்கு நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெற உள்ளதை நினைத்து எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நிறைவேற்றவே முடியாத இருந்த எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாகவும், ஜமாலியா நகர் பொதுமக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ந.பவன்குமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணராஜ், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர் உசேன், துணைத்தலைவர் ரசூல் அஹமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால்,அறிவழகன் ஜமாலியா நகர் கமிட்டி தலைவர் அகமது உசேன், பள்ளிவாசல் தலைவர்கள் சுல்தான் முஹைதீன் (மேற்கு பள்ளிவாசல்) சம்சுதீன் (கிழக்கு பள்ளிவாசல்), ஜமாலியா நகர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story