500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
ஜூன் 26 ஆம் தேதி உலகப் போதை பொருள் ஒழிப்பு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் 13 இடங்களில் பேரணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியை திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம் வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து சினிமா மற்றும் கிராமிய பாடல்கள் வடிவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.பேரணியில் திருச்செங்கோடு நகரில் உள்ள 18 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகர காவல்நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார். அண்ணா சிலை அருகே நடந்த கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.
Next Story




