54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு

சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் பல்வேறு கிராமங்களில் 54 ஏரி, குளங்கள் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டு அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வாலிகண்டாபுரம், தேவையூர், கைகளத்தூர், காரியானூர், மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (21.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில், கிராமப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு பயன் தரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சி, தம்பை ஏரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறுபாசன குளம் மேம்பாட்டு பணிகளின் கீழ் ரூ.29.03 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். ஏரியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியினை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, ஒவ்வொரு நீர்நிலைகளிலும் எவ்வளவு நீள அகலத்திற்கு, எவ்வளவு ஆழத்திற்கு தூர்வாரப்படவேண்டுமோ அந்த அளவீட்டிற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. இது போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் பல்வேறு கிராமங்களில் 54 ஏரி, குளங்கள் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டு அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணி விவசாய பயன்பாட்டிற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டப் பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். அதனைதொடர்ந்து தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட, மங்களமேடு, வேப்பந்தட்டை ஊராட்சியில் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடில் அமைத்து 50 ஆயிரம் நாற்றங்கால் மரக்கன்றுகள் வளர்க்கும் வட்டார நர்சரி கார்டன் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்த்து ஊராட்சிகளுக்கு வழங்கிடவும், மரம் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தெடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இ சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகள் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். தரமான சேவைகளை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட கூட்டுறவு கடன் சங்க செயலாளருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
Next Story

