558 தோப்புக்கரணம்: பேராவூரணி மணிகண்டன் உலக சாதனை

558 தோப்புக்கரணம்: பேராவூரணி மணிகண்டன் உலக சாதனை

உலக சாதனை 

தோப்புக்கரணம் போடுவதில் பேராவூரணியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உலக சாதனை நிகழ்த்தினார்.

கண்ணைக் கட்டிக் கொண்டு 18 நிமிடங்களில் இடைவிடாது 558 தோப்புக்கரணம் போட்டு, பேராவூரணியை சேர்ந்த பிராய்லர் கோழிக்கடை உரிமையாளர் தோப்புக்கரணம் ஜெ.மணிகண்டன் சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி புது ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெ.மணிகண்டன் (வயது 43). திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர், பேராவூரணியில் பிராய்லர் கோழி விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.

ஜெ.மணிகண்டன் சிறுவயதில் இருந்து சமூக சேவைகளில் நாட்டம் கொண்டவர். கடந்த 20, 30 வருடங்களுக்கு முன்பு, பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தண்டனையாக, ஆசிரியர்கள் தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கமாக இருந்தது.

பின்னர் இது நாளடைவில் கைவிடப்பட்டு, தோப்புக்கரணம் என்றால் என்ன என்பது, இந்தக் கால குழந்தைகளுக்கு என்னவென்றே தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஜெ.மணிகண்டன் தோப்புக்கரணத்தின் மூலம் உடலுக்கு ஏற்படும் நல்ல பலன்களை உணர்ந்து,

அதன் நன்மைகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், தாமாகவே முன்வந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே தோப்புக்கரணத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், இதனை ஒரு உலக சாதனையாக மாற்ற முயற்சித்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து இடைவிடாமல் 20 நிமிடத்தில் 558 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேலும் குறைந்த நிமிடத்தில் அதிக முறை தோப்புக்கரணம் போட்டு சாதனை படைக்க முயற்சித்த மணிகண்டன் மார்ச். 26 செவ்வாய்க்கிழமை காலை, பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில்,

இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் பிரதிநிதி நாகராஜன் என்பவர் முன்னிலையில் 18 நிமிடத்தில் 558 முறை இடைவிடாது தோப்புக்கரணம் போட்டு புதிய சாதனையை படைத்தார். முன்னதாக சாதனை நிகழ்ச்சியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார். தொழிலதிபர்கள் கந்தப்பன், எஸ்.டி.டி சிதம்பரம், பாஸ்கர், நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி, பேராவூரணி கமலா கே.ஆர்.வி. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் தெட்சணாமூர்த்தி, உள்ளிட்டோர் சாதனை படைத்த மணிகண்டனை சால்வை அணிவித்து பாராட்டினர்.

இவரது உலக சாதனையை இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் பிரதிநிதி நாகராஜன் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்தினார். இந்த சாதனையை படைக்க கடந்த ஒரு வருடமாக தான் முயற்சி மேற்கொண்டு வந்ததாக தோப்புக்கரணம் ஜெ.மணிகண்டன் தெரிவித்தார்.

Tags

Next Story