புதுமைப்பெண் திட்டத்தில் 5781 மாணவிகள் பயன் - மாவட்ட நிர்வாகம்

புதுமைப்பெண் திட்டத்தில் 5781 மாணவிகள் பயன் - மாவட்ட நிர்வாகம்

புதுமைப்பெண் திட்டம் 

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 5781 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையிலும், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறும் விதமாக புதுமைப்பெண் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகியவை புதுமை பெண் திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்தில் உள்ள 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 மருத்துவப்பிரிவு கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள், 6 தொழிற்பயிற்சி நிலையங்கள், 1 செவிலியர் கல்லூரி, 2 இதர பிரிவு கல்லூரிகள் என மொத்தம் 70 கல்லூரிகளில் பயிலும் 5781 மாணவிகளுக்கு மாதந்தோறும்; 1000/- வீதம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story