ஜன.6-ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
Chennai King 24x7 |20 Dec 2024 1:53 PM GMT
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன' என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் போது இரண்டு நாட்கள் தான் கூட்டத்தொடர் நடத்தியுள்ளனர். அதற்குக் காரணம், இந்த கூட்டத்தொடரில் கூடுதல் செலவினத்திற்கான மசோதாவை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதைப் பற்றி பெரிய அளவில் விவாதம் இருக்காது. அதற்கு முன்னால் தமிழக மின்வாரியம் பற்றிய மசோதாவும் இருக்கும் .எனவே ஜனவரி பட்ஜெட்டில் மின்வாரியம் அதற்கான விவாதம் ஏற்படாது. அதனால் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம், 10 நாட்கள் வரை நடைபெற்றன. அதிலும் குறிப்பாக 2011 முதல் 2021 வரையிலான குளிர்கால கூட்டத்தொடர் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் தற்போது அனைத்து மசோதாக்களும் கூடுதல் நேரம் ஏற்பட்டாலும் விவாதம் நடத்தி நிறைவேற்ற முதல்வர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் அறிவித்த பின்னர் சட்டப்பேரவையை நடத்த முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதாலும், கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ள பாதிப்பாலும் அரசு களத்தில் செயல்பட்டதால் அதிக நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடியவில்லை. சட்டப்பேரவையை ஒரு வருடத்துக்கு நூறு நாட்கள் நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் தேர்தல், வெள்ளம், உள்ளிட்ட பிரச்சினைகளால் பேரவையை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை. சட்டப்பேரவை குறைந்த நாட்கள் நடந்தாலும் மக்கள் பணிகளில் எந்தக் குறையும் இல்லை. சூழலுக்கு ஏற்றபடி கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். .
Next Story