6 சவரன் நகை பறிப்பு, மர்ம நபர்கள் அட்டூழியம்

X
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் முகிலன் மனைவி கல்கி, 27; இவர், கள்ளக்குறிச்சி தனியார் கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். இரவு 8.30 மணியளவில் சோமண்டார்குடி கிராம எல்லையில் அருகே சென்ற போது, கல்கியை பின் தொடர்ந்தவாறு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் ஸ்கூட்டரை மோதுவது போல வந்து, நிறுத்தினர். இதில் கல்கி நிலை தடுமாறி சாலையோரமாக விழுந்தார்.பைக்கில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கல்கியின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்தனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி மீதமுள்ள நகைகளை கழற்றி தர வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்த கல்கி தான் அணிந்திருந்த தாலி உட்பட 6 சவரன் தங்க நகைகளை கழற்றி மர்ம நபர்களிடம் கொடுத்தார். நகையை வாங்கியதும் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து கல்கி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

