கனிமவள லாரிகளால் 6பேர் உயிரிழப்பு: அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுகோள்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.
அப்போது முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த அவர் அங்கிருந்து நாகர்கோவில் வந்தார். நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, - கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களைகொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன்.
மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிமவளங்கள் கிடைப்பதில்லை. கனிமவள டாரஸ் லாரிகள் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோதங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரின் பினாமி லாரிகள் என்றாலும் சரி, எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகிறார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால்இது போன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொருத்தவரை நாங்கள்எதையும் மறைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம் ஆர் காந்தி எம் எல் ஏ உட்பட பலர் உடனிருந்தனர்.