ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல்

திருச்சியில் திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
திருச்சி சஞ்சீவி நகா் அருகே தோ்தல் பறக்கும்படை அலுவலா் முத்துக்கருப்பன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாராஜபுரத்தைச் சோ்ந்த குளஞ்சியப்பன், சஞ்சய் ஆகிய இருவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் இருந்த பையில் ரூ.4.10 லட்சம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணத்துக்கான ஆவணங்களை ஏதுமில்லை என்பதால் திருச்சி கிழக்கு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இதேபோல, பழைய பால்பண்ணை சோதனைச் சாவடியில் மேற்கு வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து மீன் லோடு இறக்கிவிட்டு வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்த ஓட்டுநா் பாபு (41)விடம் ரூ.1,92,160 இருந்தது தெரியவந்தது. கேரளத்தில் மீன் லோடு இறக்கியதற்காக பெறப்பட்ட பணத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தாா். ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.

Tags

Next Story