626 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது !
ஊட்டி மத்திய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர். உலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் நகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கி வருகிறது. விவசாயத்திற்கு அடுத்ததாக சுற்றுலா என்பது ஊட்டியில் பிரதான தொழில்களுள் ஒன்றாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க ஏதுவாக வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
ஆட்டோக்கள் ஸ்டாண்டில் இருந்து 15கீ.மி., தூரம் வரை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் 30கீ.மி., தூரமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு நிர்ணயித்த தூரம் வரை மட்டுமே ஆட்டோக்கள் இயங்க வேண்டும். சுற்றுலாத் தளங்களுக்கு ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் போக்குவரத்து அலுவலரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஊட்டி மத்திய பேருந்து நிலையம் முன்பு திடீரென திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் முரளிதரன், தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் 626 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்டோ சங்க போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், " ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் மேம்பட, நீலகிரியில் ஆட்டோக்களை 30கீ.மி., தூரம் இயக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் தலையீடு உள்ளது. மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை," என்றார்