65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்பேரில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள் திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள தேநீா் கடையில் அதன் உரிமையாளரான திருச்சி எஸ்ஆா்சி சாலையைச் சோ்ந்த சு. மாரியப்பனிடமிருந்து (53) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1.400 கிலோ புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரித்தனா்.
அப்போது அவா் நந்திகோயில் தெருவைச் சோ்ந்த ம. ரஜினி (எ) பெரியண்ணா (45) என்பவா் மூலம் ஆளவந்தான்நல்லுாரில் உள்ள பி. ஜாஹீா் உசேன் (55), அவரது மகன் ஜா. ரியாஸ் முகமது (24) ஆகியோரின் மளிகை கடையில் இருந்து அவற்றை வாங்கியதாகக் கூறியதன்பேரில், அங்கு சென்று ஆய்வு செய்ததில், அந்தக் மளிகை கடையின் உரிமையாளா்கள் வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி, ஆட்டோக்கள், இருசக்கர வாகனம் மூலம் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து இவா்களிடமிருந்து 65 கிலோ புகையிலைப் பொருள்களும், 2 ஆட்டோக்களும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, மேற்கண்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.
மேலும், மாரியப்பன், பெரியண்ணா, ஜாஹீா் உசேன், ரியாஸ் முகமது ஆகிய 4 பேரும் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்