ரூ.6.62 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

ரூ.6.62 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 850 உள்நோயாளிகள், 2,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வருகை புரிகின்றனர். அதேபோல் 400 மருத்துவ பணியாளர்கள், 600 மருத்துவ மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.6.62 கோடி திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதில் மொத்தம் 4 திறந்தவெளி குடிநீர் கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதில் 2 கிணறுகள் 27 மீட்டர் ஆழுமும், 6 மீட்டர் விட்டமும், 2 கிணறுகள் 30 மீட்டர் ஆழமும், 6 மீட்டர் விட்டமும் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெறப்படும் தண்ணீர் உந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே மருத்துவமனை வளாகத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு அனுப்பி தடையின்றி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.ஆய்வில் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆனந்தன், உதவி நிர்வாக பொறியாளர் மாரியப்ப வினோத் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story