பழுது காரணமாக வாக்குப்பதிவின்போது 69 இயந்திரங்கள் மாற்றம்
வாக்கு இயந்திரங்கள்
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்களிப்பதற்காக வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,568 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்குச்சாவடிகளில் 3,136 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,568 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,568 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.வாக்குப்பதிவின்போது திடீரென எந்திரங்கள் ஏதாவது பழுது அடைந்தால் வேறு எந்திரங்களை பயன்படுத்துவதற்கும் கூடுதலான எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் அன்று காலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது பழுது காரணமாக 9 வாக்குப்பதிவு எந்திரங்களும், 11 கட்டுப்பாட்டு கருவிகளும், 18 வி.வி.பேட் எந்திரங்களும் மாற்றப்பட்டன. அதேபோல் காலை 7 மணிக்கு பிறகு நடந்த வாக்குப்பதிவின்போதும் பல வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானது. வாக்குப்பதிவு தாமதமாவதை தடுக்கும் வகையில் உடனடியாக எந்திரங்கள் மாற்றப்பட்டன. அதன்படி 10 வாக்குப்பதிவு எந்திரங்களும், 5 கட்டுப்பாட்டு கருவிகளும், 16 வி.வி.பேட் கருவிகளும் மாற்றப்பட்டது.
இதன்மூலம் மொத்தம் 19 வாக்குப்பதிவு எந்திரங்கள், 16 கட்டுப்பாட்டு கருவிகள், 34 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 69 எந்திரங்கள் மாற்றப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.