73 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66.80 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள்
Sivagangai King 24x7 |30 July 2024 10:06 AM GMT
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66.80 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், இன்று(ஜூலை30) மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். முன்னதாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அத்துறையினுடைய பணிகளை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போல், தன் பொறுப்பில் வைத்து, மாற்றுத்திறன் கொண்டவர்களின் மறுவாழ்விற்கென எண்ணற்ற திட்டங்களை வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி, மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டு வருவதுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைத் திட்டம், பராமரிப்பு நிதியுதவித் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களால் மாற்றுத்திறனாளிகளை பயன்பெறச் செய்யும் வகையில் தமிழகத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக திகழ்ந்திடும் வகையிலும், அவர்களை போற்றிடும் வகையிலும், அவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிறரைச் சார்ந்திருக்காமல், தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மீது தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அவர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். மேலும், இன்றையதினம் இவ்விழாவின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2,00,000/- வீதம் என மொத்தம் ரூ.4,00,000/- மதிப்பீட்டிலான விபத்து மரணத்திற்கான உதவித்தொகைக்கான ஆணைகளும், 06 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,13,467/- வீதம் என மொத்தம் ரூ.6,80,802/- மதிப்பீட்டிலான தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,06,000/- மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், 46 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.96,011/- வீதம் என மொத்தம் ரூ.44,16,506/- மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,76,900/- மதிப்பீட்டிலான செயற்கைகால்களும் என மொத்தம் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66,80,208/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்று, அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். குறிப்பாக, பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், நகர்மன்றத் துணைத்தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story