நீலகிரியில் ரூ.77 லட்சம் பறிமுதல்

நீலகிரியில் ரூ.77 லட்சம் பறிமுதல்

அதிகாரிகள் சோதனை 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செய்யப்பட்டதாக ரூ‌.77 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி வெளியான மார்ச் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் முறையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ பதிவு குழு அமைக்கப்பட்டு அவர்கள் மாநில முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.49.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூ.77.75லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநில எல்லையோரம் உள்ள கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே இதுவரை ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், முக்கிய தேவையாக இருந்தால் அதற்குரிய ஆவணங்களை சரியாக கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வரும் நாட்களில் வாகன சோதனை இன்னும் தீவிரமாக நடைபெறும் என்பதால் இதைவிட அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story