சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீத வாக்குப்பதிவு
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீத வாக்குப்பதிவு
சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்குகிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, அ.தி.மு.க.சார்பில் பி.விக்னேஷ், பா.ம.க. சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 11 மணி வரை வாக்காளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இளைஞர்களை விட முதியவர்களும், இல்லத்தரசிகளும் அதிகளவில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் 6 சட்டசபை தொகுதியிலும் 8 லட்சத்து 28 ஆயிரத்து 152 வாக்காளர்களும், 8 லட்சத்து 30 ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 222 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு வாக்குப்பதிவு செய்திட தொகுதி முழுவதும் 622 மையங்களில் 1,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 78.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பின்னர் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து லாரிகளில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.