குமரி அதிமுக வேட்பாளர் உட்பட 8 பேர் மனு தாக்கல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 20 ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கியது. இதில் முதல் மூன்று நாட்கள் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு நேற்று திங்கள் கிழமை முதல் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
முதலில் பாரதிய ஜனதா சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் மனு செய்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் மனுசெய்தார். அதிமுக சார்பில் பசி லியான் நசரேத் என்பவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவும் அதிமுக குமரி மாவட்ட கிழக்குச் செயலாளருமான தளவாய் சுந்தரம், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுயேச்சை வேட்பாளராக அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனையின் மாநில தலைவர் தியோடர் சேம் என்பவர் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் பாரதிய ஜனதா, அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 6 பேர் மனு செய்துள்ளனர். இவர்களோடு இதுவரை மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று புதன்கிழமை திமுக கூட்டணி சார்பில் போட்டியிடம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் எம்பி மனு செய்ய உள்ளார்.