80 சதவீதம் மழை நீர் அகற்றம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
Thoothukudi King 24x7 |19 Dec 2024 8:17 AM GMT
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 80 சதவீதம் மழை நீர் அகற்றம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 80% மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பயிர்ச் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என அமைச்சர் பெ. கீதா ஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடியில் கடந்த 12,13,14 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழையால் மாநகராட்சியில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தற்போது, மழை ஓய்ந்து 4 நாள்கள் ஆன பின்னரும் ஆதிபராசக்தி நகர், ரஹ்மத் நகர், ராம் நகர், திருவிக நகர், கதிர்வேல் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மழை நீரை அகற்றுவதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ராட்சத பம்பிங் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு கூடுதலாக வடிகால்கள் வெட்டப்பட்டு மழை நீர் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூக நலன் -மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் 80 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 220 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண வழங்குவதற்கான நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை நீரை வெளியேற்றுவதற்காக பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தீவிர பணியாற்றி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்ட வடிகால்கள், பம்பிங் ஸ்டேஷன், உப்பாற்று ஓடை தூர்வாருதல் போன்ற பணிகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் பெருமளவு வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் பயிர்சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்றார்.
Next Story