காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 நெல் கொள்முதல் நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 நெல் கொள்முதல் நிலையம்

அறுவடை செய்யப்பட்ட நெல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவரை பருவத்தில், 68,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவரை பருவத்தில், 68,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுதும் 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு, நவரை பருவத்தில் 62,615 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு, டிசம்பரில் 24,480 ஏக்கர், ஜனவரியில் 37,758 ஏக்கர், பிப்ரவரியில் 6,000 ஏக்கர் என, 68,238 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

இது கடந்தாண்டை காட்டிலும்,5,623 ஏக்கர் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வாரத்தில் நவரை பருவ அறுவடை துவங்கும். அந்த வகையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை துவங்கியுள்ளதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், விரைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்க வேண்டும் என, விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உத்திரமேரூர் சுற்றியகிராமங்களில், இப்போதே அறுவடை துவங்கி விட்டதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர். உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர். கடந்தாண்டு நவரை பருவத்தில், 130 இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதிகபட்சமாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 50 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இப்போது, முதற்கட்டமாக 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும், சமீபத்தில் மேல்பெரமநல்லுாரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story