சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பறிமுதல்

சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பறிமுதல்

சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பறிமுதல்

மாடு பிடிக்கும் ஊழியர்கள் உதவியுடன் சாலையில் சுற்றி திரிந்த, 9 மாடுகளை பிடித்து, பறிமுதல் செய்து திருவண்ணாமலையில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி மார்க்கெட், ஓரிக்கை மிலிட்டரி சாலை, வேளிங்கப்பட்டரை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையிலும், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, காஞ்சிபுரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், நகரில் மாடு வைத்திருப்போருக்கு, நோட்டீஸ் அனுப்பி, மாடுகளை சாலைகளில் விட மாட்டோம் என, எழுத்துப்பூர்வமாக மாநகராட்சி நிர்வாகம் எழுதி வாங்கியுள்ளனர்.

இருப்பினும், பலர் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மாநகராட்சி ஊழியர்கள் வாயிலாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பறிமுதல் செய்வதோடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், மாநகர நகர் நல அலுவலர் அருள்நம்பி, சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை, வள்ளல் பச்சையப்பன் தெரு, செவிலிமேடு, ராஜாஜி காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், மாடு பிடிக்கும் ஊழியர்கள் உதவியுடன் சாலையில் சுற்றி திரிந்த, 9 மாடுகளை பிடித்து, பறிமுதல் செய்து திருவண்ணாமலையில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story