உருது பள்ளியில் 9 வயது வட மாநில மாணவன் படுகொலை

உருது பள்ளியில் 9 வயது வட மாநில மாணவன் படுகொலை

சிறுவன் படுகொலை

மேலூர் அருகே உள்ள உருது பள்ளியில் 9 வயது வட மாநில மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில், பீகாரை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி உருது பயின்று வரும் நிலையில், அதேபள்ளியை சேர்ந்த முகமது சம்சத் (13) என்ற மாணவனுக்கும், ஷாநவாஸ் (09) என்ற மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த முகமது சம்சத், சகமாணவனான ஷாநவாஸை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு எதுவும் நடக்காது போல பள்ளியில் இருந்துள்ளார். இந்நிலையில், மாணவன் ஷாநவாஸை நீண்ட நேரமாக காணாததையடுத்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மேலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டதில் சக மாணவனான ஷாநவாஸை, மாணவன் முகமது சம்சத் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, மாணவன் உடலை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாணவன் ஷாநவாஸ் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக மாணவன் முகமது சம்சத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவன் ஷாநவாஸ், முகமது சம்சத்தின் தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷா நவாஸை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடன் பயிலும் மாணவனை, சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags

Next Story