அடகுக்கடையில் 10 கிலோ நகை மோசடி:கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை
பைல் படம்
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 68). இவர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அடகுக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நந்தகோபால் மேலாளராக பணியாற்றினார். இந்த நிலையில் கடை உரிமையாளர் நகைகள் குறித்து கணக்கெடுத்த போது, அதில் 400-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வைத்திருந்த 10 கிலோ நகைகளை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நந்தகோபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நந்தகோபால் கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ நகை மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டு மூலம் 2 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் அவர்களிடம் மீதமுள்ள நகைகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீல்குமார் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.