குமரியில் குண்டர் சட்டத்தில் மேலும் 2 பேர் கைது 

குமரியில் குண்டர் சட்டத்தில் மேலும் 2 பேர் கைது 

கோப்பு படம்

குமரி மாவட்டத்தில் இதுவரை 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை, ரவுடிசம் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரவுடி கும்பல் வாலிபரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வழியாய் பரபரப்பு ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

இவர்களில் நாகர்கோவிலை சேர்ந்த நவீன் குமார் (29), அஜய் கண்ணன் (23) ஆகியோர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கைக்கு உத்தரவிடுமாறு எஸ் பி சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று மேற்கண்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் பேரில் நேசமணி நகர் போலீசார் அஜய் கண்ணன், நவீன் குமார். இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த வகையில் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 23 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர்.

Tags

Next Story