வளர்ப்பு நாய் கடித்து 4 வயது குழந்தை படுகாயம்
வளர்ப்பு நாய் கடித்து 4 வயது குழந்தை படுகாயம் : அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
ஓசூர் அருகே உள்ள பாத்த கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28) இவரது மனைவி வள்ளியம்மாள் (23) இவர்களுக்கு ஹர்சா சாய்ராம் (1½) மற்றும் ஆரிகா (04) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆரிகா அங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வருகிறார். தினம்தோறும் வள்ளியம்மாள் ஆரிகாவை அங்கன்வாடி மையத்திற்கு கூட்டி சென்று விடுவதும் பின்பு மாலை 3 மணி அளவில் திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அங்கன்வாடி பணியாளர் மதியம் 1.40 மணியளவில் மையத்தில் உள்ள குழந்தைகளை வீட்டுக்குள் செல்லுங்கள் என அனுப்பி உள்ளார். அப்போது குழந்தைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை கையில் எடுத்து கொண்டு தெருவில் நடந்து சென்றுள்ளனர். குழந்தை ஆரிகாவும் முட்டையை எடுத்து கொண்டு தெருவில் நடந்து சென்றபோது சுப்பிரமணி என்பவரது வீட்டின் முன்பு சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த வளர்ப்பு நாய் ஆரிகாவை கடித்து தாக்கியுள்ளது. இதில் ஆரிகாவின் இடது கண் பகுதி மற்றும் தலை ஆகிய இடத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை நாயிடமிருந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு நாயின் உரிமையாளர் சுப்பிரமணி அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story