சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் 7 மாத குழந்தை திடீர் சாவு
கோப்பு படம்
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு தரன் (5 ) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. பின்னர்' சிகிச்சை பெற்று குழந்தையுடன் கவுசல்யா வீடு திரும்பினார் . இந்த நிலையில் நல்ல நிலையில் இருந்த அந்த குழந்தை இன்று காலை திடீரென வீட்டில் மூச்சு பேச்சற்று மயங்கிய நிலையில் கிடந்தது . இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. இது பற்றி பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.