வெட்டி சாய்க்கப்பட்ட 70 ஆண்டு பழமையான மரம் - முற்றுகை

X
வெட்டி சாய்க்கப்பட்ட மரம்
புதுக்கோட்டை நகரிலுள்ள உழவர் சந்தை அருகே 70 ஆண்டுகள் பழைமையான வாகை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்டித்து, இயற்கை ஆர்வலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகரில் தொடர்ந்து பலரும் தன்னார்வத்துடன் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அதைவிடவும் மரங்களை வெட்டிச்சாய்க்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை உழவர் சந்தைக்குள் பெரிய மரம் வெட்டித் துண்டுகளாக்கப்பட்டு வருவது குறித்து மரம் நண்பர்கள் அமைப்பினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த அமைப்பின் செயலர் பழனியப்பா கண்ணன், ஒருங்கிணைப்பாளர். விஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். இவ்விருவரும் அரசின் பசுமைக் குழுவில் உறுப்பினர்கள் என்பதால், அங்கிருந்து நகராட்சி, வேளாண் துறையினருக்குத் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர்களும் வந்தனர். சந்தைப்பேட்டை பகுதியில் வளர்ந்த வாகை மரம் சுமார் 70 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. மேலும், அதனை வெட்டி உழவர் சந்தைக்குள் தள்ளி துண்டுகள் போட்டுள்ளனர். இதற்கு, முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதை அறிந்த நகராட்சிப் பணியாளர்கள், நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்து தொடர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மரம் நண்பர்கள் அமைப்பினர் அமைதியாக கலைந்து சென்றனர்.
Tags
Next Story
