சங்கரியில் ரயில் மீது விளையாடிய சிறுவன் படுகாயம்
படுகாயமடைந்த சிறுவன்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர் எஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த் மகன் ஸ்ரீனிவாசன் (13). இவர் எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தை பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சங்ககிரிக்கு வந்த சிறுவன் நேற்று சங்ககிரி ரயில் நிலையத்தை சுற்றி பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சங்ககிரி ரயில் நிலையம் வந்து பிளாட்பாரம் 1ன் பின்புறம் உள்ள ரயில்வே டிராக்கில் நின்றிருந்த டீசல் கூட்ஸ் வண்டியில் ஏறியபோது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக சிறுவனை மீட்ட ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவன் ஸ்ரீனிவாசன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.