தலையில் கல்லை போட்டதில் ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
கோப்பு படம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற பொரிக்கார ரமேஷ் (வயது 55). ஓட்டல் தொழிலாளி. இவருடைய நண்பர் சரவணன் (45). இவர்கள் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தனர். மேலும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்தனர்.
கடந்த 8-ந் தேதி இரவு இருவரும் ஒன்றாக மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் அங்கிருந்து சென்றுவிட்டார். மது போதையில் இருந்த ரமேஷ் கொங்கணாபுரம் பழைய ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனது மாமா வீட்டு திண்ணையில் படுத்து தூங்கினார். எனினும் ஆத்திரத்தில் இருந்த சரவணன் ரமேஷ் தூங்கி கொண்டிருந்த இடத்துக்கு சென்றாார்.
பின்னர் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த ரமேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
இந்த நிலையில் ரமேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் கொலையுண்ட ரமேசின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.