ஶ்ரீவில்லிபுத்தூரில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு
சாலையில் தீப்பற்றி எரியும் கார்
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைச்சாலை முன்பு திடீரென தீப்பற்றி எரிந்தது.காரில் இருந்து புகை வந்ததும், டிரைவர் உட்பட 4 பேரும் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(27).இவர் 2012 மாடல் மாருதி ஸ்விஃப்ட் காரில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்த கணவன், மனைவி இருவரை ஏற்றிக்கொண்டு சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்றார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து காரில் ஶ்ரீவில்லிபுத்தூர் திரும்பினார்.
மதுரை கொல்லம் நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை முன்பு வந்த போது காரில் இருந்து புகை வந்தது. சுதாரித்து கொண்டு காரில் பயணித்த டிரைவர் உட்பட நான்கு பேரும் வெளியே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தால் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.