பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரபா (31).இவர் நேற்று காலை நீதிமன்ற பணிக்காக சென்று விட்டு மாலை காவல் நிலையம் திரும்பினார்.இந்த நிலையில் பெண் காவலரான லட்சுமி பிரபா திருச்சுழி காவல் நிலைய பகுதியிலுள்ள ஹோட்டல் அருகே சீருடையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருப்புக்கோட்டை பகுதியிலிருந்து டூவீலரில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த பெண் காவலர் லட்சுமி பிரபா மீது மோதுவது போல் வந்ததாக சொல்லப்படுகிறது.இதனையடுத்து கண்மூடித்தனமாக டூவீலரை அதிவேகமாக ஓட்டிவந்த இளைஞரை பெண் காவலரான லட்சுமி பிரபா எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோபத்துடன் டூவீலரில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் சீருடையில் பணியிலிருந்த காவலரை பெண் என்றும் பாராமல் பலரது மத்தியில் திடீரென பெண் காவலரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.இந்த நிலையில் இதனை சற்றும் எதிர்பார்க்காத காவலர் லட்சுமி பிரபா சில நிமிடங்கள் நிலை குலைந்து போனார். மேலும் அந்த இளைஞர் பொதுமக்கள் மத்தியில் பெண் காவலரை தரக்குறைவாக பேசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காவலர் லட்சுமி பிரபா காயமடைந்த நிலையில் டூவீலரில் வந்த இளைஞர் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.இந்த திடீர் தாக்குதல் சம்பவம் குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் லட்சுமி பிரபா புகாரளித்தார். இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரிடம் திருச்சுழி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள நெல்லிக்குளம் மேற்குத்தெரு பகுதியை சேர்ந்த வேலுத்தேவர் மகன் முனியசாமி என்பது தெரிய வந்தது.இந்த சீருடையில் பணியில் இருந்த பெண் காவலரை பொது இடத்தில் ஆபாசமாக பேசி கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முனியசாமி மீது வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் உடனடியாக அவரை கைது செய்து அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story