துப்பாக்கி வெடித்து சி.ஐ.எஸ்.எப்., வீரர் பலி

துப்பாக்கி வெடித்து சி.ஐ.எஸ்.எப்., வீரர் பலி
பலி
திருப்போரூரில் பேருந்து வாகத்தடையில் ஏறி இறங்கியதில் துப்பாக்கி வெடித்து சி.ஐ.எஸ்.எப்., வீரர் பலியானார்.

கர்நாடக மாநிலம், மான்வி பகுதியைச் சேர்ந்தவர் ரவிகிரண், 37; சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் தலைமை காவலர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள 15ம் அவென்யூ தெருவில், 2023 ஏப்ரல் மாதம் முதல் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி, இரண்டு மகள்களுடன், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா சென்ற நிலையில், இங்குள்ள நகரியம் பகுதி சி.ஐ.எஸ்.எப்., முகாமிலிருந்து, கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாக பணிக்கு தினமும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல், நேற்று காலை 5:00 மணி வரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய வளாக கண்காணிப்பு பணியில் இருந்தார். இவர், 'இன்சாஸ்பட் என் - 68' ரக துப்பாக்கி வைத்திருந்தார். பணி முடிந்து, சக ஊழியர்களுடன் ஒப்பந்த பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் தனியார் பள்ளி அருகில், நேற்று காலை 5:20 மணிக்கு வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து, அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து பேருந்திலேயே உயிரிழந்தார்.

உடன் வந்த சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல், அணுசக்தி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் விசாரணையில், துப்பாக்கியில் இருந்த 20 குண்டுகளில், ஒன்று வெடித்தது தெரிந்தது. அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. எஸ்.பி., சாய் பிரணீத் சம்பவ இடத்தையும், பேருந்தையும் ஆய்வு செய்தார். இது குறித்து, சி.ஐ.எஸ்.எப்., உதவி சப் - இன்ஸ்பெக்டர் சென்னையா புகாரையடுத்து, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story