உதகை அருகே அணையில் மூழ்கி கோவை சாப்ட்வேர் என்ஜினியர் உயிரிழப்பு.
ராம்குமார்
நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் ராம்குமார் (28). இவர் கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்தள்ள அத்திகல் பகுதியில் இவருடைய நண்பருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ராம்குமார் தனது நண்பர்கள் சுமார் 10 பேருடன் நேற்று உதகைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு அத்திகல் செல்லும் முன்னர் ஊட்டி -கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் அணையின் பின் பக்கத்தில் நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்றார். அப்போது திடீரென்று தண்ணீரில் குதித்த ராம்குமார் நீந்தி சென்று குளித்து மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் கரைக்கு திரும்பலாம் என்று நினைத்தபோது அவரால் வர முடியவில்லை. அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு சத்தம் போட்டபோது அவர்களுடைய நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் சுமார் 50 அடி ஆழம் உள்ள இடத்தில் ராம்குமார், தனது நண்பர்களின் கண்முன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். புதுமந்து போலீசார் மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் மூழ்கி இறந்த ராம்குமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்த நிலையில் மீட்கப்ட்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.