பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
ஆட்சியர் வளர்மதி
ஆற்காடு அருகே அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் வளர்மதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஆட்சியர் பேசுகையில்,"வைரக்கல்லை பட்டைதீட்டினால்தான் ஜொலிக்கும். அதுபோல உயர்கல்வியின் மூலம் உங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களுடன் மற்ற தகவல்களையும் தெரிந்து கொண்டு தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் படித்தவர்களுக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணத்தில் படிப்பிற்கு மரியாதை வழங்குகின்றனர்.
எனவே பொதுமக்களின் இந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பனப்பாக்கம் அருகே சிப்காட் அமையவுள்ளது. இதன் மூலம் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களுக்கு அதிக வேலை கிடைக்கவுள்ளது என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, வருவாய் கோட்டாட்சியர் மனோண்மணி, மாவட்ட திறன் பயிற்சி நிலைய பாபு, கல்லூரி தலைவர் ராமதாஸ், செயலாளர் தாமோதரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.