கடலில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மாயம்
கோட்டக்குப்பம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமான நிலையில், போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய், கட்டிட காண்ட்ராக்டர். இவரது மகன் தனுஷ் (வயது 19), அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். தனுஷ் இந்தநிலையில் கல்லூரியின் பேராசிரியர் கோவிந்தசாமி, மாணவர் கள் 14 பேர், மாணவிகள் 5 பேர் என மொத்தம் 19 பேருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து சுற்றுலா வாகனத்தில் புறப்பட்டனர். அவர்கள் மாமல்லபுரம் செல்லாமல் நேற்று புதுச்சேரி வந்தனர்.
அங்கு கடற்கரையை மகிழ்ச்சியாக சுற்றி பார்த்தனர். பின்னர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்று, கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய தனுஷ், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த சக மாணவ, மாணவிகள் காப்பாற்றுமாறு... அபாய குரல் எழுப்பினர். உடனே அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடினர். தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார், கடலோர காவல் படை யினரும் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தனுஷ் கிடைக்கவில்லை. அவர் கடலில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தனுஷின் பெற்றோருக்கு கோட்டக்குப்பம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேற்று இரவு கோட்டக்குப்பம் வந்தனர். அவர்கள் தங்கள் மகனின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாணவ- மாணவிகளை சுற்றுலா அழைத்துவந்த பேராசிரியர் கோவிந்தசாமி அங்கிருந்து நைசாக புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு, புதுச்சேரிக்கு அழைத்துவந்த பேராசிரியர், தற்போது மாணவர்களை தவிக்க விட்டு சென்றுவிட்டதாக அவர் மீது தனுசின் பெற்றோர் குற்றம் சாட்டி புகார் அளித்தனர்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.