கழிவுகளை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி - மடக்கி பிடித்த பொதுமக்கள்

கழிவுகள் ஏற்றி வந்த லாரி
குமரி மாவட்டம் - கேரளா எல்லைப்பகுதியான களியக்காவிளை வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்க்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அம்மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன்,கோழி,உள்ளிட்ட பல்வேறு கழிவு களை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சிலமாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து களியக்காவிளை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு கண்டைனர் லாரி வேகமாக வந்தது. அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொது மக்கள் அதனை மரியகிரி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் லாரிக்கு அருகே பொதுமக்களை செல்ல விடாமல் டிரைவர் பொது மக்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனால் பொது மக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவரிடம் விசாரணை செய்த போது இந்த கோழி கழிவுகளை கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்கு கொண்டு வந்தது தெரியவந்தது.மேலும் அதிகாரிகளை வரவழைத்து வாகனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும்அபாராத தொகை கட்டிய பின்னர் வாகனம் திருப்பி கேரளாவிற்கு அனுப்பட்டது.
