வலையில் சிக்கிய டால்பின் - கடலுக்குள் அனுப்பிய மீனவர்கள்

டால்பினை விடுவிக்கும் மீனவர்கள்



ராமநாதபுரம் தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு, டால்பின்கள் கடந்த காலத்தில் மீனவர்களாகப் பிறந்தவர்கள் என்று. ஏனென்றால், கடலோடிகளிடம் அப்படி ஒரு பாசத்தை வெளிப்படுத்துபவை டால்பின்கள். மீனவர்கள் எவரிடமாவது டால்பின்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் நாம் கதை கேட்கலாம். மீன்பிடி படகுகளை ஒட்டி ஒடி வந்து, மூக்கைத் தேய்த்து அவை அன்பை வெளிப்படுத்தும் கடலுக்கு மேலே தாவிக் குதித்து உற்சாகத் துள்ளல் போட்டு, மகிழ்ச்சியாட்டம் போடும்.
வித்தியாசமான ஒலிகளை எழுப்பி ஏதேதோ செய்திகளைச் சொல்லவரும் யாரேனும் கடலடியில் சிக்கி, தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டால், கூட்டத்தோடு அங்கு சூழ்ந்து, தத்தளிப்பவர்களை மூக்கில் தாங்கி உந்திஉந்தி அவர்களைக் கடற்கரைக்குக் கொண்டுவந்துவிடும். அந்த அளவிற்கு கடலில் மீனவர்களின் நண்பனாக வாழ்ந்து வரும் ஒரு உயிரினம் தான் இந்த டால்பின். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட வாலிநோக்கம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில், சிக்கிய டால்ஃபினை பத்திரமாக விடுவித்து மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு குவியும் பாராட்டு. மாவட்ட நிர்வாகம் சார்பில் மீனவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.




