கடந்த 35 ஆண்டுகளாக பட்டாவுக்காக அலைந்த விவசாயி  

கடந்த 35 ஆண்டுகளாக பட்டாவுக்காக அலைந்த விவசாயி     
பட்டா மாறுதல் ஆணை பெற்ற விவசாயி சந்திரசேகரன்
மாங்குடியில் கடந்த 35 ஆண்டுகளாக பட்டாவுக்காக அலைந்த விவசாயிக்கு, மக்களுடன் முதல்வர் திட்டத்தால் தீர்வு கிடைத்துள்ளது.

தனக்கு சொந்தமான 21 சென்ட் விவசாய நிலத்திற்கு பட்டா பெறுவதற்காக, தனது 28 வயதில் தொடங்கி, 35 ஆண்டுகளாக அலைந்த விவசாயிக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம்,

வளையப்பேட்டை ஊராட்சி மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 63) விவசாயி, இவர் தனது 21 சென்ட் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, கடந்த 20.12.2023 அன்று, வளையப்பேட்டை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்தார். மனுவினை பரிசீலித்த அலுவலர்கள், மனு ஏற்கப்பட்டதாக மனுதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பினர். கடந்த ஜன.2 ஆம் தேதியன்று பட்டா வழங்கப்பட்டதாக மறு குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து விவசாயி சந்திரசேகரன், தனக்கான பட்டா மாறுதல் ஆணையினை இணையதளம் வழியாக பெற்றார். இதையடுத்து, தனது 35 ஆண்டுகள் கனவு நிறைவேறியதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

தனது கோரிக்கையை உடனே நிறைவேற்றி பட்டா மாறுதல் ஆணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோருக்கு விவசாயி சந்திரசேகரன் நன்றி தெரிவித்ததுடன், மக்களுடன் முதல்வர் திட்டத்தால் தான் பயனடைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags

Next Story