கடும் வெயிலால் சிவன்மலை அருகே காட்டுத்தீ
சிவன்மலை அடுத்த சின்னமலை பகுதியில் பல ஏக்கர் காலியிடங்களும் குடியிருப்புகள் ஏதுமில்லாத வறண்ட காட்டுப் பகுதியும் அதிகம் உள்ளது. மேலும் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இல்லாததால் இவ்விடங்கள் கால்நடைகள் மேயும் வகையில் காய்ந்த புற்களும், மரம், செடி, கொடிகளும் கொண்ட வறண்ட நிலப்பரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் மதியம் சுமார் 1 மணி அளவில் இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த பரந்த வறண்ட நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவியது.
சுமார் ஒரு மணி நேரம் அந்த காட்டுப் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். மேலும் பகல் நேரங்களில் இது போன்ற வறண்ட நிலப்பரப்பில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் கவனமுடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு பற்றி எரியும் காட்டுத்தீயின் நடுவில் மாட்டிக்கொண்டால் வெளியில் வருவது மிகவும் கடினம். கால்நடைகளும் இறக்க நேரிடும் எனவே கவனமாக இருக்க வேண்டும் என அப்பகுதி கால்நடை விவசாயிகளுக்கு வலியுறுத்தினர்.