கொடைக்கானல் பெரும்பள்ளம் பகுதிகளில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ
காட்டு தீ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, புதர்கள், செடி, கொடிகள் புல்வெளிகள் காய்ந்து சருகுகளாக காட்சியளிக்கின்றன, இதனால் மலைப்பகுதியில் உள்ள வருவாய் நிலங்களிலும், வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டப்பகுதிகளிலும் ஆங்காங்கே தீ பற்றி எரிந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனம்சரகத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அசன் கொடை வனப்பகுதி, மற்றும் இதனை ஒட்டிய அரசு வருவாய்நிலங்கள், தனியார் தோட்டப்பகுதிகளில் உள்ளிட்ட பல ஏக்கர் பரப்பளவில் இரவு வேளை முதல் காட்டு தீயானது கட்டுகடங்காமல் காற்றின் வேகத்தில் மளமளவென தீ பரவி எரிந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளும்,பறவை இனங்களும் வனப்பகுதியினை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது,மேலும் அரிய வகை மரம் மற்றும் செடிகள் தீயில் கருகி எரியும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனப்பணியாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் காட்டு தீ தொடர்வதால் புகை மண்டலமாகவும் காட்சியளிக்கின்றது. எரிந்து வரும் இந்த தீயானது இன்று காலைக்குள் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர், தீ பற்றியதற்கு உண்டான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.