நான்கு வழிச்சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்

நான்கு வழிச்சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்
பைல் படம்
நாகர்கோவில் நான்கு வழி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற சமப்வங்களை தடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி - காரோடு இடையிலான நான்கு வழி சாலைகள் நாகர்கோவில் அப்பா மார்க்கெட் முதல் புத்தேரி குளம் வரையிலான சாலை பணிகள் தற்போது முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது. திருவனந்தபுரம் செல்லும் டாரஸ் லாரிகள் கனரக வாகனங்கள் இதன் வழியாகத்தான் செல்கின்றன. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் சிலர் நடை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் இவ்வாறு நடை பயிற்சிக்காக தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வாலிபர்கள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டியுள்ளனர். வடசேரி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் நடை பயிற்சியில் இருந்தபோது அவரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர். மேலும் அந்த வழியாக பைக்கில் சென்ற ஐடி ஊழியர் ஒருவரிடம் பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story