தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு

தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு

தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் 150 வீடுகளில் ஏறத்தாழ 650 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தைச் சுற்றி விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றியிருந்த அப்பகுதி மக்களின் நிலமும் அரசால் 35 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டன. மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர், சாலை, சிற்றுந்து, சுகாதார நிலையம், அஞ்சலக சேவை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகக் குறைத்துவிட்டன. இது குறித்து இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், இக்கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்து, ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்த கிராம மக்களும் புறக்கணித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட அலுவலர்கள் இனாத்துக்கான்பட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் அலுவலர்கள் திரும்பி வந்தனர். இதனால், இக்கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தனர்.

Tags

Next Story