கடல்பசுவை மீட்டு கடலுக்குள் விட்ட மூதாட்டிக்கு பரிசு

மனோரா அருகே வலையில் அகப்பட்ட கடல் பசுவை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்ட 70 வயது மூதாட்டிக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மனோராவில் கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வனத்துறை மற்றும் ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கலந்து கொண்டு, அரிய வகை உயிரினமான கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி மீனவர்களிடம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து வலையில் அகப்பட்ட கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் வலையில் அகப்பட்ட சினையாக இருந்த கடல்பசுவை மீண்டும் கடலுக்குள் விட்ட மயில் என்ற 70 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை வழங்கி அந்த மூதாட்டியை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.

அதே போல, மீனவர்கள் வலையில் அகப்பட்ட அரிய வகை கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட இருவருக்கு தலா 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், வைல்ட் லைப் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆய்வாளர் சுவேதா ஐயர், ஓம்கார் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் பாலாஜி, மீன் வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழுமம் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story