டயா் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து : சிறுமி பலி
விபத்து
தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகேயுள்ள நடுவைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிங்கராயா் (35). இவா், தனது மகள் ஃபிளஷிகா (10), உறவினா்கள் 3 பேருடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலுக்கு உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்னி வேனில் நேற்று காலையில் புறப்பட்டுச் சென்றனா். இவா்களது வேன் வாகைகுளம் அருகேயுள்ள பொட்டலூரணி விலக்கு பகுதியில் வந்தபோது, திடீரென வேனின் டயா் வெடித்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்ததாம். இதில், பிளஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிங்கராயா் மற்றும் மூவா் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்து: தூத்துக்குடி அண்ணாநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷேக் மைதீன் (70). டபிள்யூசிஜி சாலையில் உள்ள நகைக்கடையில் வேலைசெய்து வந்தாா்.
இவா் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக நகைக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த பைக் எதிா்பாராமல் மோதியுள்ளது. இதில் காயமுற்ற அவா், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.