கபிலர்மலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுமி பலி
கபிலர்மலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுமி பலி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள சின்ன சோழிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பூமாலை. இவர்களுக்கு ரதிமா (15) ஹேமா(10,சபரீஷ்(6) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று வரதராஜன் அவரது மனைவி பூமாலையும் வேலைக்கு சென்று விட்டனர். வரதராஜனின் இரண்டாவது மகள் ஹேமா தனது தோழிகளுடன் சின்னசோழிபாளையம் அருகே உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்குள் தேங்காய் எடுப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கு இருந்த கிணற்றின் பக்கவாட்டில் கிடந்த தேங்காயை எடுப்பதற்காக ஹேமா சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். இதை பார்த்து அவரது தோழிகள் ஊருக்குள் வந்து பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் கிணற்றில் பார்த்தபோது ஹேமா தண்ணீரில் மூழ்கி விட்டது தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியின் பெற்றோர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கிய குழந்தையை சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் தேடி கிணற்றில் மூழ்கிய சிறுமியை கண்டுபிடித்து மேலே கொண்டுவந்தனர். மேலே கொண்டுவந்து பார்த்த போது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.